Friday, August 9, 2013

ஹோட்டல் டிபன் சாம்பார் !

சென்னை ஓட்டல்களில் விசேஷமாக இட்லி, தோசை, மற்றும் பொங்கல் போன்ற டிபன்களுடன் பரிமாறப்படுவது சாம்பார் . மெட்ராஸ் ஓட்டல் சாம்பார் அதே சுவையுடன்  வேறு எந்த ஊரிலும் கிடைப்பதில்லை. டிபனுடன்  தொட்டுக்கொள்ளவும், இட்லி, வடை, போண்டா ஆகியவற்றை அதில் மிதக்க விட்டு சாப்பிடவும் சுவையான டிபன் சாம்பார் செய்வது எப்படி?. படியுங்கள் இந்த செய்முறையை:

தேவையானவை:
பாசிப்பருப்பு - 100 கிராம் (வேக வைத்துக்கொள்ளவும்)
புளி ஜலம் ( கரைத்து வைத்துக்கொள்ளவும் )
நறுக்கிய காய்கறிகள் ( காரட், முருங்கைக்காய், கத்திரிக்காய், பரங்கிக்காய், தக்காளி போன்றவற்றில் எவை உள்ளதோ அவை அனைத்தும் )
சின்ன வெங்காயம்- தேவையான அளவு
கடுகு-1 டீஸ்பூன்
ஜீரகம்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 1 கிள்ளியது
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெல்லம் -  1 டேபிள்ஸ்பூன்
என்னை-தேவையான அளவு (தாளிக்க)

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியா- 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 5-6
வெந்தயம்- 1/2 ஸ்பூன்
பெருங்காயம்- சிறிய கட்டி

சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வறுக்க வேண்டிய பொருட்களை பொன்னிறமாக வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.
பிறகு  சிறிதளவு எண்ணையை வாணலியில் சூடாக்கி  கடுகு சேர்த்து , அதை  வெடிக்க வைத்து , கிள்ளிய சிவப்பு  மிளகாய், ஜீரகம், கறிவேப்பிலையை சேர்த்து , சின்ன வெங்காயத்தையும்  வதக்கி, பிறகு தக்காளியை வதக்கி,  காய்கறிகளைப்போட்டு , சிறிதளவு மஞ்சள் பொடி,தேவையான அளவு  உப்பு  போட்டு , வதக்கி, வேக வைத்த பாசிப்பருப்பை போட்டு கொதிக்க விடவும். கொதி வந்த பிறகு, புளி ஜலம் ஊற்றி கொதிக்க  விடவும் . புளி வாசனை போன பிறகு, அரைத்த பொடியைப்போட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளறி , கொதிக்க விடவும். கெட்டியாக சாம்பார் வரும்போது, வெல்லம் சேர்த்து கொஞ்சம் கோதி வந்த பிறகு, கொத்தமல்லி தழையை நன்றாக பொடிப்பொடியாக நறுக்கி, சாம்பாரில் தூவி இறக்கி வைக்கவும். கடைசியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூடாகப்பரிமாரவும். இட்லி, வடை, போண்டா , தோசை, மசாலா தோசை, ஊத்தப்பம் அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இட்லி, மினி இட்லி, வடை,போண்டா ஆகியவற்றை சாம்பாரில் மிதக்க விட்டு சாம்பார் இட்லி, சாம்பார் வடை, சாம்பார் போண்டாவாக சாப்பிடலாம். அப்படி சாம்பார் வடை, சாம்பார் போண்டாவாக  சாப்பிட்டால், பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.